வியாழன், 15 செப்டம்பர், 2022

பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல்..... தமிழ் நுண் பயிலரங்கம்

 


           இன்று (15.09.2022) பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அண்ணாவின் பேச்சாற்றல் எனும் தலைப்பில் தமிழ் நுண் பயிலரங்கம் நடைபெற்றது. 

        இப்பயிலரங்கில் அண்ணா அவர்களின் வாழ்க்கை வரலாறு, அரசியல் வாழ்வு பற்றி எடுத்துக் கூறிய அதே வேளையில் அவரின் சிறப்புக்கு மிகவும் காரணமாக அமைந்த பேச்சாற்றல் பற்றி விரிவாகவும் பல்வேறு மேடைப் பேச்சுகள் மேற்கோள் காட்டப்பட்டும் எடுத்துரைக்கப்பட்டது. 

    இப்பயிலரங்கை ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் தலைவரும், இப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான  கவி.செங்குட்டுவன் (எ) செ. இராஜேந்திரன் அவர்கள் நடத்தினார். இதில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் 17 பேர் பங்கேற்றனர். 

        இந்நிகழ்வில் அவர்கள் பங்கேற்றதன் மூலம் இன்று அனைவராலும்  பிறந்த நாள் கொண்டாடப்படும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.ந. அண்ணாதுரை அவர்களைப் பற்றியும் அவரின் தனித்த பேச்சாற்றல் பற்றியும் தெளிவாக அறிந்துக் கொண்டனர்.

















வியாழன், 8 செப்டம்பர், 2022

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான - பயிற்சி முகாம்...


      ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 08.09.2022 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்  நடைபெற்றது. 

        முகாமில் முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று இப்பயிற்சி முகாமின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றியும் பெற்றோர்களின் பங்கு பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.

       தொடர்ந்து ஒன்றிய வளமைய ஆசிரியர் பயிற்றுனர் திரு. வே. சண்முகம் பயிற்சி முகாமைத் துவக்கி வைத்து அனைவருக்கும் பயிற்சி வழங்கினார். அப்போது அவர் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் தேவைகள் குறித்தும், பள்ளி வளர்ச்சிக்கான செயல்திட்டம் தயாரிப்பது பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். அத்தோடு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பற்றியும் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றியும், குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் விவரித்தார். 

       நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் திருமதி ஜே. நாச்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு தேவராஜ், கல்வியாளர் திரு சதீஸ்குமார், உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், பூ. இராம்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

         இறுதியில் பள்ளியின் உதவி ஆசிரியர் மஞ்சுநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.














திங்கள், 5 செப்டம்பர், 2022

ஆசிரியர் நாள் விழா மற்றும் வ.உ.சி. பிறந்த நாள் விழா...



           ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (05.09.2022)
  ஆசிரியர் தினவிழா மற்றும் வ.உ.சி. பிறந்த நாள் விழா நடைபெற்றது.

     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார் இன்றைய நிகழ்வின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறி அனைவரையும் வரவேற்றார்.

     தொடர்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர் நாளின் முக்கியத்துவம் பற்றியும், இதற்குக் காரணமான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். தொடர்ந்து இதே நாளில் பிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் ஒப்பற்ற தியாகியுமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களைப் பற்றியும், அவர் சிறையில் செக்கிழுத்து துண்பப்பட்டதையும், தமது சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று கப்பல் வாங்கி, வெள்ளை அரசுக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனி நடத்தியதையும் நினைவு கூர்ந்தார்.

     பின்னர் தான் தலைமை ஆசிரியராகப் பொருப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து தனக்கு உதவியாக இருக்கும் ஆசிரியர்களை சிறப்பித்து மகிழும் நிகழ்வை நினைவு கூர்ந்து, உதவி ஆசிரியர்கள் இருவருக்கும் ஆசிரியர் நாள் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் ச. மஞ்சுநாதன் இந்நாளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை எடுத்துக் கூறி அனைவருக்கும் நன்ரி கூறினார்.

       பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.