சனி, 21 நவம்பர், 2015

உலக பாரம்பரிய வாரவிழா - 2015




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (20.11.2015)  உலக பாரம்பரிய வாரவிழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விழாவில் பள்ளித்தலைமை ஆசிரியர் அவர்கள் தமது உரையில் சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் உலகின் பலபகுதிகளிலும் உள்ள தொண்மை வாய்ய்ந்த மரபுச் சின்னங்களையும் பாரம்பரிய கலைகள், பொருட்கள் ஆகியவற்றை பாதுகாக்கவும், அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்திடவும் ஆண்டு தோறும் நவம்பர் 19 முதல் 2 வரையில் உலக பாரம்பரிய வாரமாக கடைபிடிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் உலகம் முழுமையும் அனைத்து நாடுகளிலும் இவ்விழா நடத்தப்பட்டு பாரம்பரியச் சின்னங்களும், பொருட்களும் பாதுகாப்பதோடு அதுதொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும் நமது தமிழக தொல்லியல் துறை சார்பில் தமிழகம் முழுவது 88 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது எனவும்,  அதன்படியே இன்று நமது பள்ளியில் இவ்விழா கொண்டாடப்படுகிறது எனவும், இவ்விழாக் கொண்டாட்டத்தில் பங்குபெறும் வகையில் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு பாரம்பரிய பழம் பொருட்கள் கொண்டு வந்து கண்காட்சியில் இடம்பெறச் செய்தமைக்கு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். மேலும் நாமும் நமது பாரம்பரியச் சின்னங்களையும், பொருட்களையும், கலைகளையும் பாதுகாக்க உறுதி மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
   இவ்விழா தொடர்பாக பள்ளியில் பாரம்பரியப் பழம் பொருட்கள் கண்காட்சி ஒன்றும் நடைபெற்றது. அதில் கிராமப்புறங்களில் நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்து தற்போது வழக்கொழிந்து போன பல்வேறு பொருட்களும், இந்திய பாரம்பரிய சின்னங்கள் மற்றும் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நினைவிடங்கள் குறித்த நிழற்படங்களும்  காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஒவ்வொறு பொருளையும் எடுத்துக்காட்டி அவற்றின் பயன்பாடுகள் பற்றியும், நிழற்படங்களில் காணும் இடங்கள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் விரிவாக மாணவர்களுக்கு விளக்கினார்.    
பின்னர் நமது பகுதியில் அதுபோன்ற இடங்கள் ஏதும் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளும் வகையில் களப்பயணம் மேற்கொண்டபோது  பள்ளியில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் விவசாய நிலத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு ஒன்று தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களால் கண்டுபிடிக்கபட்டது.  மூன்று பக்கமும் தமிழில் எழுத்தப்பட்டுள்ள அக்கல்வெட்டில் இருக்கும் செய்தியை முழுமையாக வாசிக்க இயலவில்லை. ஆனால் இக்கல்வெட்டு அமைந்துள்ள நிலம் இரண்டு கி.மீ தொலைவில் உள்ள பெருமாளப்பன் கோயிலுக்கு சொந்தமானது என்பதில் இருந்தும், படிக்க முடிந்த ஒருசில சொற்கள் மூலமும் இந்நிலத்தை கோயிலுக்கு தானமாகக் கொடுத்தவர்களால் இக்கல்வெட்டு எழுதப்பட்டுதாக மட்டுமே அறிய முடிகிறது. இது வரையில் தொல்பொருள் துறையினரின் கவனத்திற்கு செல்லாத இக்கல்வெட்டை   உலக பாரம்பரிய தினவிழா கொண்டாடிய நாளில் கண்டுபிடித்து அதை சுற்றி இருந்த புதர்களைச் சுத்தம் செய்து வந்ததில் எமது பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த மகிழ்வை அடைந்தனர். 
இக்கல்வெட்டு குறித்து தொல்பொருள் துறையினர் மேலும் ஆய்வு மேற்கொண்டால் இப்பகுதி குறித்த பல வரலாற்றுத் தகவல்கள் தெரிய வாய்ப்பு உள்ளது.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும்  நன்றி கூறினார்.

































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக