ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
புதன், 27 நவம்பர், 2024
சமணர் படுக்கை - மதுரை
மதுரையில் இருந்து 12கி.மீ தொலைவில் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டைக்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு குன்று ஆகும். இது கீழக்குயில்குடி ஊராட்சியில் உள்ள கீழக்குயில்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழிக் கல்வெட்டுக்களும்,சமணப் படுகைகளும், சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன
சமணர் மலையின் தென்மேற்கு பகுதியில் சிற்பங்களுடன் கூடிய குகை ஒன்று காணப்படுகிறது. இந்த குகையின் இடதுபுற பாறை முகப்பில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள அழகிய முக்குடை அண்ணலின் (மகாவீரர்) காதுநீண்ட உருவம் ஒரு செட்டியாரைப் போல் தோற்றமளிக்கிற காரணத்தால் செட்டிப்புடவு என அழைக்கப்படுகிறது.இச்சிற்பத்தில் மகாவீரர், இருபுறமும் சாமரம் வீசுபவர்கள் சூழ, முக்குடைக்கு மேலே வானவர்கள் பறந்துவர, அரசமரத்தின்கீழ், மூன்று சிம்மங்கள் தாங்கும் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அதன் கீழே இச்சிற்பத்தை செய்து கொடுத்தவரைப் பற்றிய வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது.
"வெண்பு நாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக னந்திப்ப டாரர் அபினந்தபடாரர் அவர் மாணாக்கர் அரிமண்டலப் படாரர் அபினந்தனப்படாரர் செய்வித்த திருமேனி" என்பது இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டெழுத்து செய்தி. இதன் மூலம் குறண்டி திருக்காட்டாம்பள்ளி மாணாக்கர்களே இச்சிற்பத்தைச் செய்யக் காரணமாயிருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.மேலும் இன்னாரது மாணாக்கர் என்று அவர்தம் ஆசிரியர் கொண்டு தனிநபர்கள் அடையாளப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இயற்கையாக அமைந்த குகைத்தளமான செட்டிப்புடவின் உட்பகுதியின் மேல்புறத்தில் ஐந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முதலிலும் கடைசியிலும் இயக்கியர் சிற்பங்களும் நடுவிலுள்ள மூன்று சிற்பங்களில் முக்குடைக்கு கீழே அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரர் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. முதலில் உள்ள இயக்கி சிம்மத்தின் மீதமர்ந்து யானை மேல் வரும் அசுரனை எதிர்கொள்வது போலுள்ளது.
இச்சிற்பம் மாமல்லபுரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. இவ்வியக்கியின் பெயர் கொற்றாகிரியா. கடைசியில் உள்ள சிற்பத்திலுள்ள இயக்கி இருசேடிப் பெண்கள் சூழ இடக்காலை மடக்கி வலதுகாலை நீட்டி ” சுகாசன “ நிலையில் அமர்ந்துள்ளார். இவ்வியக்கியின் பெயர் அம்பியா. இந்த ஐந்து சிற்பங்களின் கீழும் அவற்றை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
‘ ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகுணசேன தேவர் சட்டன் தெய்வ பலதேவர் செய்விச்ச திருமேனி ‘,’ ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டித் திருக்காட்டாம்பள்ளிக் குணசேனதேவர் மாணாக்கர் வர்தமானப் பண்டிதர் மாணாக்கர் குணசேனப் பெரியடிகள் செய்வித்த திருமேனி ‘,’ ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்கின்ற குணசேனதேவர் சட்டன் அந்தலையான் களக்குடி தன்னைச் சார்த்தி செய்வித்த திருமேனி ‘ என்றுள்ள கல்வெட்டுக்கள்வழி மாதேவிப் பெரும்பள்ளிக்கு நெடுங்காலமாய் பொறுப்பு வகித்த குணசேனதேவர் மற்றும் அவருடைய மாணாக்கர்கள் இச்சிற்பங்களைச் செய்து கொடுத்து பாதுகாத்தனர் என்பதை அறியலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக