ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
செவ்வாய், 19 நவம்பர், 2024
குழந்தைகள் நாள் விழா - 2024 மற்றும் மகிழ் முற்றம் துவக்க விழா....
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் நாள் விழா மற்றும் மகிழ் முற்றம் துவக்க விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் கோ. ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தனது உரையில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் குழந்தைகள் நாள் விழாவாக கொண்டாடப்படுவதன் அவசியம் பற்றியும், இன்று புதிதாகத் தொடங்கப்பட்ட மகிழ் முற்றம் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் மாணவர்களின் தலைமைப் பண்பு, தனித் திறமைகளை வளர்க்கவும், குழு மனப்பான்மை, குழுச் செயல்பாடுகள் ஆகியவற்றை மேம்படுத்தவும் அமைக்கப்படும் முகிழ் மன்றக் குழுக்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு தம்மையும், தமது குழு உறுப்பினர்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் மா. யோகலட்சுமி, மு. அனிதா, கணினிப் பயிற்றுநர் மு. அகிலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில்முதலிடம் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் க. தர்ஷினி, சா. திருநாவுக்கரசு ஆகியோருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்த நாள் சிறப்பு பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் ச. மாரியப்பன், ம. குரு ஆகியோருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களது வாழ்த்துச் செய்தியோடு அனைவருக்கும் நன்றி கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக