ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (20.03.2022) பெற்றோர் ஆசிரியர் கழக சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பெ. மகாலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அதில் அவர் பள்ளியின் இன்றைய வளர்ச்சி நிலைகள், மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் தொடர்பான பல பிரச்சனைகள் பற்றி விரிவாகப் பேசினார். அத்தோடு பள்ளியின் இன்றைய அடிப்படைத் தேவைகளான குடிநீர், வகுப்பறைக் கட்டடம், சுற்றுச்சுவர் மேம்பாடு குறித்தும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் இன்றைய சிறப்புக் கூட்டத்திற்கான காரணத்தை விளக்கும் போது பள்ளி மேலாண்மைக் குழு என்பது என்ன, அதன் கடமைகள், பொறுப்புகள், அதன் அமைப்பு முறை மற்றும் அவசியம் ஆகியன பற்றி விரிவாகப் பேசினார்.
தொடர்ந்து பெற்றோர்கள் பேசும் போது பள்ளியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றி கருத்து தெரிவித்து பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் மற்றும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், உடற் கல்விக்கென தனி ஆசிரியர் நியமனம் போன்றவற்றை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டனர், தற்காலிக ஏற்பாடாக தற்போது தலைமை அசிரியரால் ஓர் ஆசிரியர் தற்காலிக பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, மாணவர் எண்ணிக்கை கருத்தில் கொண்டு, மேலும் ஓர் தற்காலிக ஆசிரியர் நியமிக்க ஊராட்சி மன்றத் தலைவர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
பின்னர் பேசிய கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சி மன்றத் தலைவர் திரு தி. வெங்கடேசன் அவர்கள் பேசும்போது பெற்றோர்களின் கோரிக்கைகள் ஏற்று ஓர் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதாக கூறினார். தொடர்ந்து அவர் பேசும் போது அடுத்த நிதியாண்டு முதல் இவ் ஊராட்சியில் நடைமுறைக்கு வர உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் பள்ளி அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக புதிய வகுப்பறைக் கட்டடம், குடிநீர் வசதி, சுற்றுச் சுவர் வசதி ஆகியவற்றை மேம்படுத்தித் தருவதாக ஒப்புதல் அளித்தார்.
கூட்டத்தில் நாச்சகவுண்டனூர் வார்டு உறுப்பினர் விஜயகுமாரி பிரகாஷ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பெ.தேன்மொழி உள்ளிட்ட அனைத்து பெற்றோர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும், பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு.இலட்சுமி, திரு ச.மஞ்சுநாதன், திரு பூ.ராம்குமார் ஆகியோரும், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களும் கலந்துகொண்டனர்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. இராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக