சனி, 26 மார்ச், 2022

தேசிய கல்மரப் பூங்கா

 


      மிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை எனும் கிராமத்திற்கு. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும் தினமும் பல ஆயிரக் கணக்கான மக்கள் வருகிறார்கள். அந்த மக்களுக்கு தெரிந்ததெல்லாம் இங்குள்ள ஸ்ரீ வக்ர காளியம்மன் திருக்கோயில்தான்..

ஆனால் இங்கு இன்னும் ஓர் ஆச்சரியப் பகுதி இருப்பது யாருக்கும் தெரிவதில்லை ஆம், அது இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேசிய கல்மரப் பூங்கா.

கடந்த வாரம் நான் அப்பகுதிக்கு குடும்பத்துடன் சென்று பார்வையிட்ட நினைவுகளை அனைவரின் பார்வைக்கும் கொண்டு வருகிறேன்

திருவக்கரை கிராமத்திற்குக் கிழக்கே சுமார் ஒரு கிமீ தொலைவில் ஓர் மேட்டு நிலப்பகுதிகளில் மல் பாறைகளுக்கிடையே கல்லாக மாறிய மரங்கள் காணப்படுகின்றன. இந்த படிவப் பாறைகள் கடலூர் மணற்கல் தொகுப்பைச் சேர்ந்தவை. சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியிலிருந்த காடுகளிலிருந்து ஆற்றில் டித்துக் கொண்டுவரப்பட்ட மரங்கள் மணலோடும் கூழாங் கற்களோடும் சேர்ந்து இங்கிருந்த நீர்நிலைகளில் படிந்தன. காலப்போக்கில் மேன்மேலும் மணற் படிவங்கள் அடுக்கடுக்காக படிந்ததால் ஏற்பட்ட வெப்ப அழுத்த மாற்றங்களால் இவை மரத்தின் தன்மையை இழந்து சிலிக்காவை எடுத்துக்கொண்டு கல்மரங்களாக மாறின. ஆயினும் காலவளையங்கள் கணுக்கள் போன்மரத்தின் தோற்றம் மாறாமல் அப்படியே காணப்படுகின்றன. இங்கு சுமார் 247 ஏக்கர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட கல்மரங்கள் உள்ளன. பெரும்பாலும் படுக்கை வாக்கில் கிடைக்கும். இந்த அடிமரங்களில் கிளைகளோ, வேர்களே. பட்டையோ காணப்படவில்லை. இதன்மூலம் இவை இப்போது உள்ள இடத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் கல்மரங்களாக மாறியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
சில 30மீ நீளமும் 1.5மீ குறுக்களவு உடையவை. ஐரோப்பியாவைச் சேர்ந்த சொன்னேர்ட் எனும் ஐரோப்பிய அறிஞர் 1781ல் இந்த கல்மரங்களை பகுப்பாய்வு செய்துள்ளார். இவைகளில் சில திறந்த விதைத் தாவர இனத்தையும் சில மூடிய விதைத் தாவர இனத்தையும் சேர்ந்தவை. இக்காலத்தில் உள்ள புன்னை கட்டாஞ்சி, ஆமணக்குக் குடும்பங்களைச் சேர்ந்த மரங்களும் புளியமரத்தைப் போன்றவைகளும் இங்கே கல்மரங்களாக உள்ளன. உலகின் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். இந்த அரிய வகை கல்மரங்கள் பூமியின் வரலாற்றை உரைக்கும் சான்றுகளாகும். மிகவும் கவனமாகப் போற்றி பாதுகாக்கப்படவேண்டியன இவ்வகை கல்மரங்களாகும். நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அரிய வகை தேசிய புவியியல் நினைவுச் சின்னங்களை பராமரித்து வரும் இந்திய புவியியல் ஆய்வுத்துரை 1957ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கல்மரங்களை போற்றிப் பாதுகாத்து வருகிறது.

















ஞாயிறு, 20 மார்ச், 2022

நம் பள்ளி, நம் உரிமை....

 


             ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (20.03.2022) பெற்றோர் ஆசிரியர் கழக சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

     இதில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பெ. மகாலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.  அதில்  அவர் பள்ளியின் இன்றைய வளர்ச்சி நிலைகள், மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் தொடர்பான பல பிரச்சனைகள் பற்றி விரிவாகப் பேசினார்.  அத்தோடு பள்ளியின் இன்றைய அடிப்படைத் தேவைகளான குடிநீர், வகுப்பறைக் கட்டடம், சுற்றுச்சுவர் மேம்பாடு குறித்தும் வேண்டுகோள் விடுத்தார்.

            மேலும் இன்றைய சிறப்புக் கூட்டத்திற்கான காரணத்தை விளக்கும் போது பள்ளி மேலாண்மைக் குழு என்பது என்ன, அதன் கடமைகள், பொறுப்புகள், அதன் அமைப்பு முறை மற்றும் அவசியம் ஆகியன பற்றி விரிவாகப் பேசினார். 

                     தொடர்ந்து பெற்றோர்கள் பேசும் போது பள்ளியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றி கருத்து தெரிவித்து பள்ளியில்  போதுமான ஆசிரியர்கள் மற்றும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், உடற் கல்விக்கென தனி ஆசிரியர் நியமனம் போன்றவற்றை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டனர், தற்காலிக ஏற்பாடாக தற்போது தலைமை அசிரியரால் ஓர் ஆசிரியர் தற்காலிக பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு,  மாணவர் எண்ணிக்கை கருத்தில் கொண்டு, மேலும் ஓர் தற்காலிக ஆசிரியர் நியமிக்க ஊராட்சி மன்றத் தலைவர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 

                  பின்னர் பேசிய கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சி மன்றத் தலைவர் திரு தி. வெங்கடேசன் அவர்கள் பேசும்போது பெற்றோர்களின் கோரிக்கைகள் ஏற்று ஓர் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதாக கூறினார். தொடர்ந்து அவர் பேசும் போது அடுத்த நிதியாண்டு முதல் இவ் ஊராட்சியில் நடைமுறைக்கு வர உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் பள்ளி அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக புதிய வகுப்பறைக் கட்டடம்,  குடிநீர் வசதி, சுற்றுச் சுவர் வசதி ஆகியவற்றை மேம்படுத்தித் தருவதாக ஒப்புதல் அளித்தார்.

            கூட்டத்தில் நாச்சகவுண்டனூர் வார்டு உறுப்பினர் விஜயகுமாரி பிரகாஷ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பெ.தேன்மொழி உள்ளிட்ட அனைத்து பெற்றோர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும், பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு.இலட்சுமி, திரு ச.மஞ்சுநாதன், திரு பூ.ராம்குமார் ஆகியோரும், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களும்  கலந்துகொண்டனர். 

             இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. இராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.