இன்று (15.02.2016) கிருஷ்ணகிரி மாவட்ட அனைவருக்கும்
கல்வித் திட்ட அலுவலக பயிற்சி அரங்கத்தில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப்
பண்பு வளர் பயிற்சி (
School Leadership Development Programme for Headmasters) எனும் பயிற்சி முற்பகல் 9.30 மணிக்கு இறை வணக்கத்துடன் துவங்கியது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 18 தலைமை ஆசிரியர்களும், தருமபுரி மாவட்டத்தில்
இருந்து 15 தலைமை ஆசிரியர்களும் ஆக மொத்தம் 33
பேர் கலந்துக்கொண்டனர்.
முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
திரு காவேரி அவர்கள் பயிற்சிக்கு வந்திருந்த அனைத்து தலைமை ஆசிரியர்களையும் வரவேற்று,
பயிற்சியைப் பற்றிய கருத்துரைகளை வழங்கியும், இப்பயிற்சி முகாமுக்கு செய்யப்படுள்ள
ஏற்பாடுகள் பற்றியும் கூறி, தனது சுய அறிமுகத்தோடு பயிற்சிக்கு வந்துள்ள கருத்தாளர்கள்
மற்றும் பயிற்சியாளர்கள் அறிமுகத்தை துவக்கி வைத்தார்.
பின்னர் பயிற்சிக் கருத்தாளர் திரு பி. சென்னி
வீரப்பா அவர்கள் தமிழ் மொழி வாழ்த்தோடு தனது உரையைத் துவங்கி பயிற்சியின் நோக்கம்,
அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். அடுத்து முதல் செயல்பாடாக தமக்குத் தெரிந்த
”பயிற்சி” எனும் சொல்லுக்கு இணையான சொற்களை
அனைத்து பயிற்சியாளர்களும் எழுத கேட்டுக்கொண்டார். அனைத்து ஆசிரியர்களும் மிக்க ஆர்வத்தோடு
பங்கேற்றனர், நான் 21 இணைச் சொற்கள் எழுதி வாசித்தேன். அதேபோல் மற்றவர்களும் வாசித்தனர்.
இதன் மூலம் பயிற்சி எனும் சொல்லுக்கு மேம்பாடு எனும் பொதுச்சொல் புதுச்சொல்லாக
அறிமுகப்படுத்தப்பட்டது.
தேநீர் இடைவேளைக்குப் பின் அடுத்த கருத்தாளர்
திரு மாதேஸ்வரன் அவர்கள் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். அவர் அடுத்த செயல்பாடாக அனைவரும்
1. இப்பயிற்சி தொடர்பாக தங்களின் எதிர்பார்ப்புகள்,
2. தாங்கள் பள்ளியில் எதிர்கொள்ளும் சவால்கள்……
ஆகியன குறித்து மூன்று, மூன்று கருத்துகள்
எழுதச் செய்தார். பின்னர் அவைகளை அனைத்து ஆசிரியர்களும் தனித்தனியே கூறுமாறு கேட்டுக்கொண்டார்.
இதன் மூலம் இப்பயிற்சி குறித்து ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள் பற்றி அறிய முடிந்தது.
அத்தோடு பள்ளிகளில் தினமும் தாங்கள் எதிர்கொள்ளும்
சவால்கள் பற்றியும், அதற்கான தீர்வுகளாக தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும்
தமது அனுபவக் கருத்துக்களைக் கூறியது அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.
அடுத்த
வகுப்பில் ”நேர்மை” மற்றும் “காலந்தவறாமை” என்ற சொற்களுக்கான இணைச் சொற்கள்
மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் பற்றி பயிற்சியாளர்கள் எழுதச் செய்து, அவற்றை வாசிக்கச்
செய்யப்பட்டது. இதில் காலந்தவறாமை என்பது தலைமை ஆசிரியர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம்
வாய்ந்தது என்பது குறித்து உணத்தப்பட்டது.
பிற்பகல் உணவு இடை வேளைக்குப் பின்னர் அனைத்து ஆசிரியர்களும்
எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு …..
1. அகிம்சைத்
தலைவர்,
2. ஜனநாயகத் தலைவர்,
3. சர்வாதிகாரத் தலைவர்
ஆகிய மூன்று வகையான தலைவர்கள் குறித்த கருத்துக்களை
வண்ண அட்டைகளில் எழுதும் செயல்பாடு குழுச் செயல்பாடாக வழங்கப்பட்டது. அச்செயல்பாடு
நடைபெற்றுக்கொண்டிருந்த போதே கிருஷ்ணகிரி மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் திரு வே. தமிழரசு
அவர்கள் வந்து கலந்துக்கொண்டு பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல கருத்துக்களை
கூறி, பின்னர் பயிற்சியில் கலந்துக் கொண்டுள்ள தலைமை ஆசிரியர்கள் தமது பணிக்காலத்தில்
செய்த சாதனைகள் பற்றி கூறச் செய்து அவர்களுக்கு
பாராட்டு தெரிவித்தார்.
அடுத்ததாக
இம்மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறப்புத் திட்டமான “இல்லம் நோக்கும் பள்ளி” எனும் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி தென்றல் மகேஷ்குமார் அவர்கள் திட்டத்தின்
செயல்பாடுகள் பற்றியும், அதன் வெளிப்பாடுகள் பற்றியும் விரிவாக கூறியதோடு மாணவர்கள்
மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி மற்றும் வாழ்க்கைக்கான விழிப்புணர்வுக்
கருத்துக்கள் பற்றியும் கூறினார்.
இறுதியாக
மூவகைத் தலைவர்கள் குறித்து பயிற்சியாளர்கள் வண்ண அட்டைகளில் தமது குழு விவாதத்தின்
மூலம் எழுதியிருந்த கருத்துக்களை தனித்தனியே குழுத் தலைவர்கள் வழங்கினர். இதில் மூவகையான
தலைவர்களின் தலைமைத்துவம் பற்றியும் அதன் வெளிப்பாடுகள் பற்றியும் விரிவாக அறிய முடிந்தது.
இதன் மூலம்
இச்செயல்பாட்டின் மையக் கருத்தாக அனைவரும் ஜனநாயகத் தலைவர்களாக இருப்பதே சிறந்தது என்ற
கருத்து எட்டப்பட்டு இன்றைய இன்றைய நாள் இனிமையாக நிறைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக