திங்கள், 13 ஜனவரி, 2020

பொங்கல் விழா – 2020




இன்று 13.01.2020 திங்கட்கிழமை ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக காலையில் பள்ளி மாணவர்களால் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்திடும் இடத்தை மாணவிகள் கோலமிட்டு அழகுபடுத்தினர்.  மாணவர்கள் பொங்கலுக்கேயான வேப்பிலை, பூலாம்பூ, ஆவாரம்பூ, பண்ணைக்கீரைப்பூ, வேப்பிலை உள்ளிட்டவைகளைக் கொண்டு தோரணங்களைக் கட்டினர்.
அதன் பின்னர் மாணவர்களால், பொங்கல் வைப்பதற்கான பாணை மற்றும் அடுப்பு ஆகியன மங்கள மஞ்சள், மயக்கும் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டு அழகுபடுத்தப்பட்டது. அதன்பின் போதுமான அளவிற்கு நீர் நிரம்பிய பொங்கல் பாணை அடுப்பில் ஏற்றப்பட்டு, கற்பூரம் மூலம் அடுப்பு பற்றவைக்கப்பட்டது. பாணையில் உள்ள நீர் கொதித்த பின்னர் ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டு ஏற்அனவே ஊறவைத்து வைக்கப்பட்டிருந்த பச்சரிசி பாணையில் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் கொட்டப்பட்டது. கொட்டப்பட்ட அரிசி ஒருபாதி வெந்த பிறகு பாணையில் நிரம்பி வழிந்தோடிய வெண்நுரையை கண்டு மாணவர்கள் அடைந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடு பொங்கலோ பொங்கல்”, ”பொங்கலோ பொங்கல்” ”பொங்கலோ பொங்கல், என்ற கூக்குரலின் வாயிலாகவே அறிய முடிந்தது. பின்னர் தயார் நிலையில் பக்குவப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லம், நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரி, திராட்சை, தூளாக்கி வைக்கப்பட்டிருந்த ஏலக்காய் ஆகியவற்றை பொங்கல் பாணையில் போட்டு கலக்கினர். பொங்கல் முழுமையும் வெந்த பிறகு அதை பக்குவமாக இறக்கிவைத்தனர்.
பின்னர் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவான பொங்கல் விழாவில் படையலுக்காக வாங்கிவரப்பட்ட பூசணி உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள், இனிக்கும் செங்கரும்பு, மனக்கும் மஞ்சள் ஆகியவற்றையும் மாணவர்களால் உள்ளன்போடும், மட்டற்ற மகிழ்வோடும் தயாரிக்கப்பட்ட பொங்கலையும் சூரியனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
முடிவில் மாணவர்களின் முழு ஈடுபாட்டோடும், மனமகிழ்வோடும் தயாரிக்கப்பட்ட பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டபோதும், அதை ருசித்தபோதும் அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை எனலாம்.

பள்ளித் தலைமை ஆசிரியர்  திரு செ. இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, திரு ஜி.எம். சிவக்குமார், திரு வே. இராஜ்குமார், தற்காலிக ஆசிரியர் கா. நித்தியா சத்துணவு அமைப்பாளார் பீமன் ஆகியோர் ஒத்துழைப்போடு நடைபெற்ற இவ்விழா அனைவருக்கும் ஓர் மகிழ்வான தமிழர் திருநாள் என்றால் அது மிகையல்ல.








































திங்கள், 6 ஜனவரி, 2020

புதியதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வரவேற்பு விழா….




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (06.01.2020) புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது.
பள்ளித்தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சி மன்றத்திற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு தி. வெங்கடேசன் உள்ளிட்ட சிற்றூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வரவேற்பு விழாவும், பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாடக்குறிப்பு ஏடுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில் புதிதாக தேர்வு பெற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தனது வாழ்த்துக்களையும், வரவேற்பையும் பள்ளியின் சார்பில் கூறி அவர்கள் ஆற்ற வேண்டிய சமுதாய கடமைகள் மற்றும் சேவைகள் குறித்தும் விரிவாக விளக்கி பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில்
”ஈன்ற பொழுதின்  பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்........”
எனும் குறளை நினைவு கூர்ந்து, இன்று சிற்றூராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கடேசன் தனது மாணவர் என்பதை அனைவருக்கும் எடுத்துக் கூறி, ஒருதாய் தந்து குழந்தையை 10 மாதம் சுமந்து பெற்றபோது அடையும் மகிழ்ச்சியைவிட, கற்றோரும் மற்றோரும் நிறைந்த அவைதனிலே சான்றோன் எனக் கேட்பதை  மிகவும் பெருமையாகக் கொள்வாள் அதுபோல தான் இப்போது பெருமை கொள்வதாகக் கூறி மகிழ்ந்தார்.
            வரவேற்பையும் பாராட்டுகளையும் ஏற்றுக்கொண்டு பேசிய  சிற்றூராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் அவர்கள் தந்து உரையில் தான் இவ்வளவு உயரத்திற்கு வளர காரணமான ஆசிரியர்களுக்கு நன்றி கூறி, பதவி ஏற்று முதல் நிகழ்ச்சியே பள்ளி நிகழ்ச்சி என்பதில் மகிழ்ச்சி கொள்வதாகவும், தனது பதவிக் காலத்தில், ஜோதிநகர் பள்ளியின் தலைமை ஆசிரியரும், எனது வழிகாட்டியுமான ஐயா செ. இராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டலுடன்  கெங்கபிராம்பட்டி ஊராட்சியை  தமிழகத்தின் சிறந்த ஊராட்சியாக உயர்த்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களோடு செயல்படுவேன் எனக்கூறினார்.
            நிகழ்வில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் காமராஜ்நகர் திரு தேவராஜ், நாச்சகவுண்டனூர் திருமதி விஜயகுமாரி பிரகாஷ், மண்ணான்டியூர் திருமதி கோவிந்தம்மாள் சுரேஷ், மற்றும் உதவி ஆசிரியர்கள் திரு வே. இராஜ்குமார், திரு. ஜி.எம். சிவக்குமார், திருமதி நித்யா ஆகியோரும், கிராம பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.