செவ்வாய், 3 செப்டம்பர், 2013

சூரிய ஒளி மூலம் பெறும் மின்சாரம் – பயன்பாடு செயல்முறை விளக்கம்.



     எமது பள்ளியில் இன்று சூரிய ஒளி மூலம் எவ்வாறு மின்சாரம் பெறலாம் எனவும், அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் ஓர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
     3 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்யில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது பற்றியும் அவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் மாணவர்களுக்கு நேரடியாக செயல் விளக்கம் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களால் அளிக்கப்பட்டது. அப்போது பள்ளியில் மாணவர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் புத்தாக்கக் கண்காட்சியில்  பார்வைக்கு வைக்கப்பட்ட சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வீட்டு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட   செயல் முறை மாதிரியை   மாணவர்களுக்கு காட்டி நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
     அப்போது மாணவர்களுக்கு தற்போதைய கூடுதல் மின்சார தேவை மற்றும் உற்பத்திக் குறைவு ஆகியன குறித்தும் மின்சார உற்பத்திக்கு ஆகும் கூடுதல் செலவுகள் குறித்தும் விரிவாகக் கூறி குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்ய ஏற்ற முறை சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரமே எனவும் இதுதான் எதிர் காலத்தில் அனைவருக்கும் பயன்படும் எனவும் விளக்கிக் கூறப்பட்டது.
இதன் மூலம் சூரிய ஒளிமூலம் எவ்வாறு மின்சாரத்தை தயாரிக்க முடியும் எனவும், அதை எவ்வாறு சேமித்து இரவு நேரங்களிலும் பயன்படுத்தலாம் எனவும் மாணவர்கள் அறிந்தனர். 








சனி, 31 ஆகஸ்ட், 2013

ஒன்றிய அளவிலான சதுரங்கப் போட்டி


 

இன்று 31.08.2013 ஊத்தங்கரை ஒன்றிய அளவில் துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான  சதுரங்கப் போட்டிகள் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஊத்தங்கரை ஒன்றியத்தைச் சார்ந்த 30 நடுநிலைப் பள்ளிகளும் 20 துவக்கப் பள்ளிகளும் இப்போட்டிகளில் கலந்துக் கொண்டன.
      முன்னதாக போட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருமதி வி. இராணி அவர்கள் துவக்கி வைத்தார். ஊத்தங்கரை வட்டத்தைச் சார்ந்த அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தினர்.
      இரு கட்டங்களாக நடைபெற்ற போட்டிகளில் 1 முதல் 5 வகுப்பு ஆண்கள் பிரிவில் மு.சதீஷ்குமார் ஊ.ரெட்டிப்பட்டி முதல் பரிசும், பூவரசன் முசிலிக்கொட்டாய் இரண்டாம் பரிசும், எஸ். சச்சின் சின்னகாரப்பட்டு  மூன்றாம் பரிசும்பெற்றனர். பெண்கள் பிரிவில் எம். சௌமியா முசிலிக்கொட்டாய் முதல் பரிசும், எஸ். மாலதி படப்பள்ளி இரண்டாம் பரிசும், டி. இலக்கியா நாப்பிராம்பட்டி மூன்றாம் பரிசும் பெற்றனர். அடுத்து நடைபெற்ற 6 முதல் 8 வகுப்புகளுக்கான போட்டிகளில் ஆண்கள் பிரிவில் உதயகுமார் ஜோதிநகர், கே. தினேச்க்குமார், பீமாராவ்ராம்ஜி கொண்டம்பட்டி, அபிமன்யு பெருமாள்நாயகன்பட்டி ஆகியோரும், பெண்கள் பிரிவில் கீர்த்தனா படபள்ளி, நிஷாந்தி முசிலிக்கொட்டாய், சௌமியா, சினேகா நாப்பிராம்பட்டி ஆகியோரும் தேர்வு செய்யப் பெற்றனர்.
      பின்னர் அரசு மேல் நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் திரு பி. பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. பிரசாத், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோ.மா. சீனிவாசன் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமதி அலங்காரமணி, ஜோதிநகர் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன், ஊ.ரெட்டிப்பட்டி தலைமை ஆசிரியர் திரு. மா. கிருஷ்ணமூர்த்தி, வெள்ளக்குட்டைத் தலைமை ஆசிரியர் திரு மு. உதயசங்கர் உள்ளிட்ட தலைமை ஆசிரியர்களும், உதவி ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர்.


























ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

தினமணி செய்தி


எமது பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டி குறித்து இன்று 25.08.2013 தினமணியில் வண்ண நிழற்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. செய்தி வெளியிட்ட தினமணி நிர்வாகத்திற்கு எமது பள்ளியின் சார்பிலான நன்றிகள்.





வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

சதுரங்கப் போட்டிகள்

                  எமது பள்ளியில் இன்று ஒன்று முதல் எட்டு வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  1 -5 வகுப்புகள் மற்றும் 6 - 8 வகுப்புகள் என இரு பிரிவுகளில் சதுரங்கப் போட்டிகள் பள்ளி அளவில் நடைபெற்றது. முன்னதாக போட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். அப்போது அவர் சதுரங்கப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கும் போது அவர்களின் சிந்தனைத் திறன் மேம்படுவதோடு, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவமும், அதைத் தீர்ப்பதற்கான மன வலிமையும் மேம்படும் எனக் கூறியும் போட்டிகளின் விதிமுறைகளை விளக்கியும் துவக்கி வைத்தார்.
               இன்று பள்ளி அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் 1 - 5 வகுப்பு பிரிவில் மா. தமிழரசன், பூ. தனுஷ் (ஆண்கள் பிரிவு), ப. பூந்தளிர், சு. அர்ச்சனா (பெண்கள் பிரிவு) ஆகியோரும், 6 - 8 வகுப்பு பிரிவில் வே. உதயகுமார், ச. விக்னேஷ் (ஆண்கள் பிரிவு), வி. கிருத்திகா, ச. நந்தினி (பெண்கள் பிரிவு) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
                 போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு ப. சரவணன், திருமதி சு. சாரதா, திரு வே. வஜ்ஜரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் செய்தனர்.