புதன், 28 பிப்ரவரி, 2024

தேசிய அறிவியல் நாள் விழா – 2024 மற்றும் பன்னாட்டு பயனுறு தமிழ் மன்ற நூலகத் துவக்கவிழா……

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (28.02.2024) தேசிய அறிவியல் நாள் விழா - 2024 மற்றும் பன்னாட்டு பயனுறு தமிழ் மன்ற அறிவியல் தமிழ் நூலகத் துவக்க விழா ஆகியன மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளித்தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக அறிவியல் ஆசிரியர் திருமதி மா. யோகலட்சுமி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளதாக கூறி, அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து உதவி ஆசிரியர்கள் வெ. சண்முகம், மு. அனிதா ஆகியோர் நிகழ்வு குறித்து கருத்துரை வழங்கினர். நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள் தனது உரையில் இன்றைய நாளின் முக்கியத்துவம் குறித்தும், தேசிய அறிவியல் நாளாக பிப்ரவரி 28ஐ இந்திய ஒன்றிய அரசு அறிவிக்க காரணமாக அமைந்த நிகழ்வான ”இராமன் விளைவு” வெளியிடப்பட்ட நாள் குறித்தும், இதற்காக உலகின் உயரிய நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் சர்.சி.வி இராமன் குறித்தும் விரிவாகப் பேசினார். மேலும் சுகன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு தற்போது செல்ல உள்ள 4 இந்தியர்கள் பற்றியும், அவர்களில் ஒருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் கூறி பெருமிதம் கொண்டார். தொடர்ந்து பன்னாட்டு பயனுறு தமிழ் மன்ற அறிவியல் தமிழ் நூலகத்தை துவக்கி வைத்து, அதில் மாதம் தோறும் வாங்கப்படும் அறிவியல் தமிழ் நூல்களை மாணவர்கள் தொடர்ந்து படித்து, தமது பிற்கால வாழ்க்கை மேம்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டு, இந்த நூலகம் நமது பள்ளியில் அமைய உரிய வாய்ப்பையும், மாதம் தோறும் புதிய நூல்கள் வாங்கிட உரிய நிதி உதவியும் அளித்திட முன்வந்துள்ள பன்னாட்டு பயனுறு தமிழ் மன்றத்திற்கு நமது பள்ளியின் சார்பிலான நன்றியை தெரிவிப்பதாகவும் கூறி முடித்தார். பின்னர் 6 முதல் 8 வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் மாணவர்கள் தாமே தயாரித்து கொண்டு வந்திருந்த 24 அறிவியல் ஆய்வுப் படைப்புகளை காட்சிப்படுத்தி அவற்றைப் பற்றி விளக்கினர். இது இன்றைய நிகழ்வின் சிறப்பாக அமைந்தது. பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளியின் உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

புதன், 21 பிப்ரவரி, 2024

தமிழ்மாமணி விருது......

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கவி. செங்குட்டுவன் எனும் செ. இராஜேந்திரன் அவர்களுக்கு 'உலகத் தாய்மொழி நாள் விழா'வில் "தமிழ்மாமணி" விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. திருச்சி நந்தவனம் அறக்கட்டளை சார்பில், திருச்சி பிரீஸ் ரெசிடென்சியில் நடைபெற்ற உலக தாய்மொழி நாள் விழாவில் ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன் அவர்களது உலகலாவிய தமிழ்ப் பணியைப் பாராட்டி "தமிழ்மாமணி" எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேஜர் டோனர் கே. சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அறக்கட்டளை தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் யோகம் ரியல் எஸ்டேட் நிருவாக இயக்குநர் இரா. செழியன், திருச்சி நவநீதா பில்டர்ஸ் நிருவாக இயக்குநர் பி. சுரேஷ் நவநீதா, மாவட்ட ரோட்டரி ஆளுனர் கார்த்திக் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பேராசிரியர் மீ. சந்திரசேகரன் அவர்கள் தமிழின் தொன்மை வரலாறு பற்றியும், பழந் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். ப. தனபால் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழறிஞர்களும், தமிழார்வலர்களும் வந்து பங்கேற்றனர்.