எமது பள்ளியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் அதன்
தலைவர் திருமதி வி. பத்மா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி கிராமக்
கல்விக் குழுத்தலைவர் திரு டி.பூபதி முன்னிலை வகித்தார்.
முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய பள்ளித் தலைமை ஆசிரியர்
திரு.செ.இராஜேந்திரன் அவர்கள் தற்போதைய பள்ளியின் நிலை பற்றியும், இனி வருங்காலங்களில்
இப்பள்ளியில் செயல்படுத்த உள்ள ஆண்டுச் செயல்திட்டம் பற்றியும் மிக விரிவாக எடுத்துக்கூறி
நமது கிராமத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் எவரும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்
எனவும் அதற்காக அனைத்து பெற்றோர்களும் பொது மக்களும் பள்ளி ஆசிரியர்களோடு இணைந்து கிராமத்தில்
உள்ள பள்ளி செல்லாத அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்திட உரிய
முயற்சியும், ஒத்துழைப்பும் அளித்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில் பள்ளியில் இவ்வாண்டு மேற்கொள்ள உள்ள கீழ்க்கண்ட
ஆண்டுச் செயல்திட்டம் சிறப்பாக செயல்படுத்திட முழு ஒத்துழைப்பை அளிப்பதாக தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1. கிராமத்தில் உள்ள பள்ளி வயதுக் குழந்தைகள்
அனைவரையும் பள்ளியில் சேர்ந்து தொடந்து படித்திட முழு முயற்சி மேற்கொள்ளுதல்.
தீர்மானம் : 2. பள்ளி மாணவர்களின் சேவை மனப்பான்மையை வளர்த்திடும்
பொருட்டு பள்ளியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் துவக்கி அதன் மூலம் சேவை உணர்வை ஊட்டுதல்.
தீர்மானம் : 3. பள்ளி மாணவர்கள் இயற்கையை நேசிக்கவும், பாதுகாக்கவும்
ஊக்குவிக்கும் வகையிலும், புவி வெப்பமாதலை தடுத்திடும் முயற்சியில் அவர்களை ஈடுபடுத்திடும்
வகையிலும் பள்ளியில் சுற்றுச் சூழல் மன்றம் துவக்கி செயல்படுத்துதல்.
தீர்மானம் : 4. மாணவர்களின் கற்றல் திறமைகளையும், வெளிப்பாட்டுத்
திறமைகளையும் மேம்படுத்தும் வகையிலும், பாட இணைச் செயல்பாடுகளில் ஆர்வத்தை வளர்க்கும்
வகையிலும் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம், ஆங்கில மொழி மன்றம், அறிவியல் மன்றம், கணித
மன்றம் ஆகியவற்றைத் துவக்குவதெனவும் அதற்கு சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் முழு பொருப்பேற்று
ஒவ்வோர் மன்றம் சார்பிலும் தலா ஓர் நிகழ்வு மாதம்தோறும் வழங்கிடல்.
தீர்மானம் : 5.
மாணவர்களின் பன்முக ஆளுமைத் திறனை மேம்படுத்தும் பொருட்டு பள்ளியில் குழந்தைகள் பாராளுமன்றம்
துவக்கி அதன் மூலம் குழந்தைகளுக்கு குடிமைப் பயிற்சி உள்ளிட்டவைகளை திறம்பட அளித்தல்.
தீர்மானம் : 6.
மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒழுங்கு தன்சுத்தம் ஆகியவற்றை வெளிப்படுத்தும்
வகையில் அனைத்து மாணவர்களுக்கும் கழுத்தணி (tie) இடுப்பணி (belt) அடையாள வில்லை (batch)
புகைப்பட அடையாள அட்டை (photo ID card) ஆகியவற்றை வழங்குதல்.
தீர்மானம் : 7. மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்திடவும்,
புத்தக வாசிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் தினமும் பிற்பகல் 1.30 முதல் 2.00 மணி
வரையில் நூலக வகுப்பு கட்டாய வகுப்பாக நடத்துதல்.
தீர்மானம் : 8. மாணவர்களின் உடல் நலம், மன நலம் ஆகியவற்றை
மேம்படுத்திட வேண்டி வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் யோகா மற்றும் கூட்டு உடற்பயிற்சி
வகுப்பு நடத்துதல்.
இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெற்றோர்கள் அனைவரும் பள்ளிக்கு
முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி கூறினர்.
பின்னர் பள்ளி உதவி ஆசிரியர் திரு ப. சரவணன் அனைவருக்கும்
நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக