வெள்ளி, 22 ஜூலை, 2011

களப் பயணம்

எமது பள்ளி மாணவர்களை களப் பயணமாக ஊத்தங்கரை அழைத்துச் சென்றோம். அப்போது முதலாவதாக பார்வையிட்ட இடம் தீயனைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் அங்கு நிலைய அலுவலர்கள் மிகச் சிறப்பான முறையில் செயல் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்களின் பணி மற்றும் அதற்காகப் பயன்படுத்தும் கருவிகள் பற்றியும் சிறப்பாக விளக்கினர். பின்னர் காவல் நிலையம் சென்ற மாணவர்களுக்கு அங்கிருந்த காவல் துணை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக வரவேற்று அவர்களின் பல்வேறு பணி நிலைகள் பற்றியும் பொறுப்புகள் பற்றியும் எடுத்துக் கூறியதோடு அவர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கம்பியில்லா தொலைபேசிக் கருவியான ஒயர்லஸ், வாக்கிடாக்கி ஆகியவற்றைக் காட்டி செயல் முறை விளக்கமளித்தனர். அடுத்ததாக பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்ற பொழுது அங்கே வங்கியின் பல்வேறுபட்ட சேவைகள் மற்றும் பொது மக்களோடு உள்ளத் தொடர்பு  ஆகியவை பற்றி வங்கி அலுவலர் விளக்கினார். அடுத்து கணினி நூலகம் சென்று அங்கு உள்ள 30க்கு மேற்பட்ட கணினிகளை ஒரே இடத்தில் பார்த்து வியந்தனர். மேலும் அங்கு இருந்த போட்டித் தேர்வுகளுக்கான நூல்களையும் பார்வையிட்டனர்.  அடுத்து அரசு பொது நூலகம் சென்ற போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களையும் அவை கதை, கட்டுரை நாவல், கவிதை, பொது அறிவு, வரலாறு, இலக்கியம் போன்ற பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டிருந்தக் காட்சி மாணவர்களைக் கவர்ந்தது. இக் களப் பயணம் மூலம்  மாணவர்கள் மிகப் பல செய்திகளை செயல் முறை விளக்கங்களோடு நேரிடையாக கற்றுககொண்டமை பயனுள்ளதாக அமைந்தது.


































வெள்ளி, 15 ஜூலை, 2011

கல்வி வளர்ச்சி நாள் விழா


            இன்று 15.07.2011 ஊத்தங்கரை ஒன்றியம் கொட்டுகாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராசரின் 109வது பிறந்த நாள் விழா “கல்வி வளர்ச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவரும், மூன்றம்பட்டி சிற்றூராட்சி மன்றத் தலைவருமான திரு இராதா நாகராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக நடைபெற்ற ஊர்வலத்தை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி. திருவேங்கடம் அவர்கள் துவக்கி வைத்தார். பள்ளி விழாவில் ஊத்தங்கரை அரசு மகளிர் மேநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு பெ. இராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ. மா. சீனிவாசன் அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுரை நல்கினார். விழாவில் முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளியின் தற்போதைய வளர்ச்சி நிலைகள் பற்றியும், எதிர்காலச் செயல் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்து அனைவரையும் வரவேற்றார். பின்னர் ஒன்றிய வள மைய ஆசிரியப் பயிற்றுநர் திருமதி தி. இசைஅருவி மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்ளிட்டவர்களின் வாழ்த்துரைகளுக்குப் பின் கடந்த ஆண்டு 100 சதவீத பள்ளி வருகை புரிந்த மாணவர் மூவருக்கும், மாவட்ட அளவிலான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடமும், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் மூன்றாமிடமும் பெற்ற மாணவிக்கும், கடந்த ஆண்டுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்ட பின் பள்ளி உதவி ஆசிரியர் திரு.பி. பாண்டுரங்கன் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவெய்தியது.