வெள்ளி, 15 ஜூலை, 2011

கல்வி வளர்ச்சி நாள் விழா


            இன்று 15.07.2011 ஊத்தங்கரை ஒன்றியம் கொட்டுகாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராசரின் 109வது பிறந்த நாள் விழா “கல்வி வளர்ச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவரும், மூன்றம்பட்டி சிற்றூராட்சி மன்றத் தலைவருமான திரு இராதா நாகராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக நடைபெற்ற ஊர்வலத்தை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி. திருவேங்கடம் அவர்கள் துவக்கி வைத்தார். பள்ளி விழாவில் ஊத்தங்கரை அரசு மகளிர் மேநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு பெ. இராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ. மா. சீனிவாசன் அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுரை நல்கினார். விழாவில் முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளியின் தற்போதைய வளர்ச்சி நிலைகள் பற்றியும், எதிர்காலச் செயல் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்து அனைவரையும் வரவேற்றார். பின்னர் ஒன்றிய வள மைய ஆசிரியப் பயிற்றுநர் திருமதி தி. இசைஅருவி மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்ளிட்டவர்களின் வாழ்த்துரைகளுக்குப் பின் கடந்த ஆண்டு 100 சதவீத பள்ளி வருகை புரிந்த மாணவர் மூவருக்கும், மாவட்ட அளவிலான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடமும், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் மூன்றாமிடமும் பெற்ற மாணவிக்கும், கடந்த ஆண்டுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்ட பின் பள்ளி உதவி ஆசிரியர் திரு.பி. பாண்டுரங்கன் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவெய்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக