கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று 15.06.2016ல் தேர்வுநிலை ஆணைகள் வழங்கப்பட்டது.
ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு மு. விஜயராஜ் அவர்கள் தலைமையிலும், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி த. மகேஸ்வரி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற விழாவில் முன்னதாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் திரு குழந்தைவேலு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் கடந்த 2004 மற்றும் 2005 ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமணம் பெற்று 01.06.2006ல் முறைப்படுத்தப்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தற்போது பணியாற்றி வரும் 59 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் தாம் ஏற்ற பணியில் பத்தாண்டு காலம் முடித்தமைக்கான தேர்வுநிலை ஆணைகள் விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஜெ. பாபு அவர்களால் வழங்கப்பட்டது. இதன் மூலம் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் இனி தமது ஊதியத்தில் 6% கூடுதலாகப் பெறுவர். ஆணைகளை வழங்கிப் பேசிய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் அனைத்து ஆசிரியர்களும் தமது திறன்களை முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இறுதியில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத்தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவில் தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன்,
வட்டாரத் தலைவர் கி. கோபால், பொருளாளர் திரு த. செல்வம், மகளிர் அணிச்
செயலாளர் திருமதி க தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் திரு செ. வெங்கடேசன், வட்டாரச் செயலாளர் திரு மு. மோகன், மாவட்டத் துணைச் செயலாளர் திரு செந்தில்குமார், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்டச் செயலாளர் திரு மா. கிருஷ்ணமூர்த்தி, வட்டாரத் தலைவர் திரு சி.ந. பழனி, பொருளாளர் திரு எஸ். ராஜ்குமார், உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்