வியாழன், 7 ஏப்ரல், 2016

கல்விச் சுற்றுலா

 

எமது பள்ளியின் சார்பில் மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு மிகச் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு கடந்த 02.04.2016 சனிக்கிழமை அன்று சென்று வந்தோம்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை, திருவண்ணாமலை, சாத்தனூர் அணை ஆகிய இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று காண்பிக்கப்பட்டது.
காலை சரியாக 5.30 மணிக்கு பள்ளியில் இருந்து புறப்பட்ட எமது பேருந்து 9.00 மணிக்கு செஞ்சிக்கோட்டையை அடைந்தது.  அங்கு காளை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு முதலில் கிருஷ்ணகிரி கோட்டை என்றழைக்கப்பட்ட இராணிக்கோட்டையை பார்வையிட மலையேறினோம். மிக்க ஆர்வத்தோடும், மகிழ்வோடும் மலை ஏறிய மாணவர்கள் வழிநெடுங்கிலும் காணப்பட்ட பல வரலாற்றுச் சுவடுகளைக் கண்டு வியந்து மலை உச்சியில் காணப்பட்ட இராணிக்கோட்டை மற்றும்  பிரம்மாண்டமான தாணியக் களஞ்சியங்கள், சுதைசிற்ப வேலைப்பாடுகள் அமைந்த செங்கற்களால் கட்டப்பட்ட கோயில்கள் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தனர்.
பின்னர் இராஜகிரி என்றழைக்கப்படும் இராஜா கோட்டை உள்ள பகுதிக்கு வந்த மாணவர்கள் முதலில் கோட்டைக்கு வெளியில் அமைந்துள்ள சதத் உல்லாக்கான் தேசிங்குராஜனை போரில் வென்று கோட்டையைக் கைப்பற்றியதன் நினைவாக கி.பி. 1717-18 இல்  கட்டப்பட்ட சதத் உல்லாக்கான் மசூதியை பார்வையிட்டனர்.

தொடர்ந்து கோட்டைக்கு உள்ளே சென்ற மாணவர்கள் போர்வீரர் தங்குமிடங்கள் மற்றும் குதிரைலாயங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். அவை, உயரம் குறைந்த கவிகை மாடங்கள். வளைவு வளைவான நுழைவாயில்கள், தனியறைகள், என குதிரைகள் இளைப்பாறவும் போர்வீரர்கள் தங்கவும் சிறப்பாக கட்டப்பட்டு இருந்தன. இந்த கவின்மிகு அறைகளில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து போர் வீரர் குடியிருப்பு வரிசைக்கு தெற்கில் உள்ள யானைக்குளம் பார்வையிட்டனர். குளத்தை சுற்றிலும் அழகு மிளிர  அமைக்கப்பட்டிருந்த மாடங்கள் அழகின் ரகசியங்கள்.

        அடுத்து விஜய நகர கட்டடக்கலை பாணியில் அமைந்த செஞ்சிக் கோட்டையின் பெருமைமிகு கட்டடங்கள் ராஜகிரி மலையின் கீழ் கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள பிரமாண்டமான நெற்களஞ்சியம் பார்வையிட்டனர், இது தாராளமான நுழைவாயிற் பகுதி கொண்டும், மிக உயர்ந்த சுவர்களைக் கொண்டும் மூன்று மீட்டர். பீப்பாய் போன்ற அரைவட்ட கவிகை மாடத்தைக் கொண்டும் அமைக்கப்பட்டு உள்ளது. இது தற்போது உடற்பயிற்சி கூடமாக செயல்படுகிறது.


இது தவிர பீரங்கிகள், பீரங்கி கற்குண்டுகள், பல்வேறு வகையிலான  சிற்பங்கள் என பழம்பெருமைகளை பார்த்து ரசித்தனர்.
அடுத்து திருவண்ணாமலை கோயில் சென்றுடைந்தோம். அங்கு முதலில் 217 அடி உயரமுள்ள ராஜகோபுரம் என்றழைக்கபடும் கிழக்கு கோபுரம், திருமஞ்சன கோபுரம் என்றழைக்கபடும் தெற்கு கோபுரம், பேய்க் கோபுரம் என்றழைக்கபடும் மேலக்கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கபடும் வடக்குக் கோபுரம் ஆகியவற்றையும் ஸ்ரீ ரமண மகரிஷி 14 ஆண்டுகள் தங்கி தவமிருந்த பாதாள லிங்கம் ஆகியவற்றை மிக பிரம்மிப்போடு பார்வையிட்டனர்.
மதிய உணவுக்குப் பின் தமது பயணத்தை துவங்கி தொடர்ந்து பிற்பகல் சுமார் 4.30 மணியளவில் இயற்கை அழகு கொஞ்சும் சாத்தனூர் அணை சென்றடைந்தோம்.
ஜவ்வாதுமலை தொடர்ச்சியில்,  இவ் அணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அந்தக் காலத்து சினிமாவில் டூயட் பாட்டு என்றால், இந்த அணைதான் சிறந்த லொகேஷன். 500க்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளது. 119 அடி உயரமும், 7,321 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவும் கொண்ட பிரமாண்டமான அணை இது.
அங்கு முதலில் தமிழகத்தின் புகழ்பெற்ற, பலவகை முதலைகளை உள்ளடக்கிய மிகப்பெரிய முதலைப் பண்ணையை மாணவர்கள் பார்வையிட்டனர்.  இங்கு பல்வேறு வயதின் அடிப்படையில் சுமார் 300 முதலைகள் பண்ணையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

       அடுத்து 50 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த பூங்காவையும், கடல் போல் காட்சி அளித்த அணையையும் மாணவர்கள் பார்த்து மகிழ்ந்தனர். பூங்காவில் பூத்துக் குழுங்கிய பல வண்ன மலர்களைப் பார்த்து மகிழ்ந்த மாணவர்கள், கூடவே ஆங்காங்கே தத்ரூபமாக    வடிவமைக்கப்பட்டிருந்த மனித மற்றும் விலங்கு, பறவைகளின் வடிவங்களைப் பார்த்து வியந்தனர்.
     மாணவர்கள் பார்வையிட்ட அனைத்து இடங்களிலும் முன்னதாக சம்மந்தப்பட்ட இடத்தின் சிறப்பு, வரலாற்றுத் தகவல்கள் விரிவாக கூறப்பட்டது.
     இதே மன மகிழ்வோடு அனைத்து மாணவர்களும் தத்தமது இல்லங்களை வந்தடைந்தனர்.