வியாழன், 28 மார்ச், 2013

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுக் கூட்டம்




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்திடும் பொருட்டு இன்று (28.03.2013) மதிய உணவு இடை வேளையின் போது அருகில் உள்ள ஏரியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் பணியாற்றிக்கொண்டு இருந்தவர்களிடையே அடுத்த கல்வி ஆண்டில் தமது குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளியில் சேர்த்திட வேண்டி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு  கூட்டம் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது கூட்டத்தில் தற்போது தமது (அரசு) பள்ளியில் பின்பற்றப்படும் புதிய கல்வி முறைகள் மற்றும் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்றிட உள்ள வசதி வாய்ப்புகள் பற்றியும், புத்தக கற்றலுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலம் நாடும் கல்விக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், சுற்றுச் சூழல் மன்றம் பற்றியும், கணிணிக் கல்வி, தொலைக்காட்சி(TV) மற்றும் பெருந்திரை(PROJECTOR) வழி கற்பித்தல் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் அரசு மூலம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள், அவற்றை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளல் பற்றியும் மிக விரிவாக எடுத்துக் கூறினார். கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் ஜோதிநகர் பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து வெளியிடப்பட்ட துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் 4 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கலந்துக்கொண்டனர். இது அரசு பள்ளிகள் மீது பொது மக்களின் கவனத்தை ஈர்க்க பெரும் வாய்ப்பாக அமைந்தது. மேலும் இக்கூட்டத்தின் வாயிலாக 15 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தனியார் பள்ளிகளில் பயிலும் தமது குழந்தைகளை திரும்ப அழைத்து வந்து எமது அரசு பள்ளியில் சேர்த்திட விருப்பம் தெரிவித்தமை மிகவும் மகிழ்ச்சிக்குறியதாய் அமைந்தது.      
 


 




 

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

64வது இந்திய குடியரசு தின சிறப்பு விளையாட்டுப் போட்டிகள்


                    ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இந்தியத் திருநாட்டின் 64வது குடியரசு தின சிறப்பு விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 
                    முன்னதாக காலையில் பள்ளியில் மூவர்ண தேசியக்கொடி பள்ளித் தலைமை ஆசிரியரால் ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன் விழா துவங்கியது. பின்னர் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பள்ளி மாணவர்கள் குடியரசுதினம் தொடர்பான பாடல்கள், கவிதைகள் ஆகியவற்றைப் பாடினர் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா.நாகராஜு மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.