ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
திங்கள், 14 ஆகஸ்ட், 2023
சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி........
ஊத்தங்கரையில் நடைபெற்ற சரக அளவிலான சதுரங்கப் போட்டியில் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி ச. ஆராதனா முதலிடம் பெற்றார்.
கடந்த 11.08.2023 ல் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊத்தங்கரை சரக அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவிற்கு ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி சி. இராதிகா அவர்கள் தலைமை தாங்கினார். ஜோதிநகர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன், ஒட்டம்பட்டி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு மாம்.கி.ஞானசேகரன், மிட்டப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு முத்துராகவன், பெரியத் தள்ளப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் திரு பார்த்திபன் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.
ஊத்தங்கரை சரகத்தில் உள்ள உயர்தொடக்க, உயர்நிலை/மேல்நிலை மற்றும் அனைத்து தனியார் பள்ளிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்ற இப்போட்டி 11 வயதுக்கு உட்பட்டோர், 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வதுக்கு உட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியே நடைபெற்றது. இப்போட்டிகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாடிய கிராமபுற அரசு பள்ளி மாணவர்கள் தமது திறமைகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற்றமை பாராட்டுக்குறியது.
இதில் 14 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் பிரிவில் ஊத்தங்கரை ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி ச. ஆராதனா முதலிடம் பெற்று சாதனை படைத்தார். ஒட்டுமொத்த நடுநிலைப் பள்ளிகளில் இம்மாணவி மட்டுமே முதல் இரண்டு இடங்களில் தேர்வு பெற்றுள்ளார் என்பது சிறப்புக்குறியது. மற்றவர்கள் அனைவரும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)