வியாழன், 13 ஆகஸ்ட், 2015

ஊத்தங்கரை புத்தகக் கண்காட்சியில் எமது பள்ளி மாணவர்கள்.......

             ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 40பேர் இன்று (13.08.2015) ஊத்தங்கரையில் நடைபெற்று வரும் வானவில் புத்தகக் களஞ்சியம் சார்பிலான புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டனர்.
              பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் வந்த மாணவர்கள் முதல் முறையாக ஓர் புத்தகக் கண்காட்சியை பார்வயிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள் . முன்னதாக அவர்களுக்கு புத்தகக் கண்காட்சி பற்றியும் அதன் நோக்கம் பற்றியும், இங்கு இடம்பெற்றுள்ள நூல்கள் பற்றியும் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டது. 
             பின்னர் புத்தகக் கண்காட்சியை முழுமையாகப் பார்வையிட்ட   மாணவர்கள் தமக்குத் தேவையான புத்தகங்களையும் அவர்களே தேர்வு செய்து விலைக்கும் வாங்கினார்கள். இவை இப்புத்தகக் கண்காட்சியின் நினைவாக பயன்படுத்துவோம் எனவும் தமது வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ள பயன்படும் எனவும் மாணவர்கள் கூறினர்.


















செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

முப்பதாம் ஆண்டு துவக்கம்…..



ஊத்தங்கரை  ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 11.08.2015 பள்ளித் தலைமை ஆசிரியரின் 30ம் ஆண்டு பள்ளி கல்விப் பணி  துவக்க நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் முதன் முதலாக 11.08.2015 அன்று, அன்றைய ஊத்தங்கரை ஒன்றியம் வடுகனூர் துவக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக தனது பள்ளி கல்விப் பணியைத் துவக்கி 29 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 30ஆம் ஆண்டு துவங்குவதை நினைவு கூறும் வகையில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.  
பின்னர் பேசிய அவர் இந்த 30ம் ஆண்டில் கடந்த 29 ஆண்டுகள் செய்த பணியைக் காட்டிலும் கூடுதலான பணியை மேற்கொள்ள உள்ளதாகவும், அதன் முதல் கட்டமாக இந்த ஓராண்டில் (11.08.2015 முதல் 10.08.2016வரை) மட்டும் மாணவர்களின் திறனை மேம்படுத்திடவும் அவற்றை வெளிப்படுத்திடவுமான 30 சிறப்பு நிகழ்ச்சிகளை நமது பள்ளியில் நடத்திட விரும்புவதாகவும் அதற்கு அனைத்து உதவி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி அ. நர்மதா, திருமதி த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் பள்ளித் தலைமை ஆசிரியரின் 30ம் ஆண்டு கல்விப் பணிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அவரின் இவ்வாண்டுக்கான செயல் திட்டமான 30ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களின் திறனை மேம்படுத்திட முழு ஒத்துழைப்பு நல்குவதாகவும் உறுதி அளித்தனர்.  
















செவ்வாய், 28 ஜூலை, 2015

கலாமுக்கு அஞ்சலி



              இன்று 28.07.2015 செவ்வாய்க்கிழமை எமது பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
             பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் தமது உரையில் மறைந்த ஆ.ப.ஜெ. அப்துல்கலாம். அவர்கள் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக இருந்தது மட்டுமல்லாமல் இந்தியாவை வல்லரசாக்க பாடுபட்டவர். இந்தியாவின் எதிர்காலமே மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில்தான் உள்ளது என உறுதியாக நம்பியவர் எனவும் அதனாலேயே தனது வாழ்வின் கடைசி நிமிடத்தைக் கூட மாணவர்களுடனேயே கழித்து தன்னுயிரை விட்டுள்ளார் எனவும் கூறி அவரின் தியாகங்களை பின்பற்றி நாமும் இந்நாட்டிற்காக தொண்டாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.
            நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி த. லதா, திருமதி அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.