வெள்ளி, 11 அக்டோபர், 2013

சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா


இன்று 11.10.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திரு . சரவணன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் சர்வதேச பெண் குழந்தைகள் தினவிழா எனும் இவ்விழாவின் அவசியம் பற்றி எடுத்துக் கூறியதோடு, இன்று உலகில் சர்வதேச சமூகம் பெண் கல்விக்காக, பெண்கள் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டு வரும் பல முயற்சிகள் மற்றும் நமது மத்திய மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
பின்னர் பள்ளி பெண் குழந்தைகள் பெண் கல்வி, பெண்கள் சுய முன்னேற்றம், பெண் உரிமை தொடர்பான பேச்சு, கவிதை, பாடல்கள் ஆகியவற்றை வழங்கினர்.  
இவ்விழா முழுமையும் இன்று பெண் குழந்தைகளைப் போற்றும் ஓர் விழாவாகவே சிறப்புடன் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி சு. சாரதா, திருமதி . நர்மதா ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் நன்றி கூறினார்.  

















புதன், 9 அக்டோபர், 2013

கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இன்று 09.10.2013 கொடுப்பதில் மகிழ்வு (JOY OF GIVING) எனும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியை திருமதி சு. சாரதா அனைவரையும் வரவேற்றார். பின்னர் தலைமை சிறப்புரை ஆற்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள் ”கொடுப்பதில் மகிழ்வு” எனும் இவ்விழாவின் அவசியம் பற்றியும், இதன் மூலம் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஈகைப் பண்பு பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி, இந்த இளம் பருவத்தில் கற்றுக்கொள்ளும் இப்பண்பு தமது பிற்கால வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வழி வகுக்கும் என்றும், இத்தகைய ஈகைப் பண்பை தொடர்ந்து கடைபிடித்தால் நாமும் மகிழலாம், பிறரையும் மகிழ்விக்கலாம் எனவும் கூறினார்.
     பின்னர் மாணவர்கள் தாம் தயாரித்து கொண்டு வந்திருந்த பல வண்ண கலைப் பொருட்களையும், பரிசுப் பொருட்களையும் தமக்குப் பிடித்தமான நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.
     அதன் பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பேனாக்களை பரிசாக வழங்கி மகிழ்ந்தார். விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினர்.
     இறுதியாக பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் மூலம் பெறப்பட்ட சாதிச் சான்றிதழ்களை நெகிழி உறையுடன் (LAMINETED)  பள்ளித் தலைமை ஆசிரியர் வழங்கினார்.