எமது பள்ளிக்கு இன்று ஆந்திர மாநிலத்திலிருந்து தேசிய வளர்ச்சி அறக்கட்டளை (NATIONAL DEVELOPEMENT TRUST) எனும் அமைப்பிலிருந்து அதன் தலைவர் திரு இரவி மற்றும் இயக்குநர்கள் இராமானுஜம், இரகு ஆகியோர் எமது பள்ளி அமைந்துள்ள மூன்றம்பட்டி சிற்றூராட்சியை சிறந்த சுகாதாரமான ஊராட்சிக்கான நிர்மல் புரஸ்கார் விருது வழங்கிட தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவினராக வருகைபுரிந்தனர். உடன் ஊத்தங்கரை ஒன்றிய ஆணையாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், மூன்றம்பட்டி சிற்றூராட்சித் தலைவர் திருமதி உஷாராணி குமரேசன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வந்தனர்.
அப்போது அவர்கள் பள்ளி சுகாதாரம் மற்றும் மாணவர்களின் தன் சுத்தம் பற்றி விரிவாக ஆய்வு செய்தனர். பின்னர் பள்ளியின் சுத்தமான கழிவறைகள், திடக்கழிவு மேலாண்மையின் கீழ் பராமரிக்கப்படும் மக்கும் குப்பை மற்றும் மக்காதக் குப்பைக்கான குப்பைக் குழிகள், பள்ளி மலர்த் தோட்டம், மூலிகைத் தோட்டம் உள்ளிட்டவைகளையும் பள்ளிக்கான பிரத்தியேக வலைப்பூவான ”கல்விக்கோயில்” ஆகியவற்றையும் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர். அப்போது பள்ளி வளாகமானது ஓர் சுற்றுலாத் தளம் போல் காட்சி அளிப்பதாக குழுவின் தலைவர் திரு இரவி அவர்கள் குறிப்பிட்ட போது அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளிப் பெற்றோர்கள் பெருத்த மகிழ்வைத் தெரிவித்தனர்.