ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
புதன், 8 மார்ச், 2023
ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கினைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பேச்சுப் போட்டி இன்று (08.03.2023) “வாசிப்பை நேசி – வாழ்க்கையை சுவாசி” என்ற தலைப்பில் நடைபெற்றது.
இதில் முன்னதாக வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் ஒன்றியத்திற்கு இருவர் வீதம் 20 பேர் மாவட்டம் முழுமையும் இருந்து வந்து கலந்துக்கொண்டனர்.
புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்ட விழிப்புணர்வுக்காக இப்போட்டி நடைபெற்றாலும், துவக்கக் கல்வி கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர் முதல் மேல்நிலைக் கல்வி கற்பிக்கும் முதுநிலை ஆசிரியர் வரையிலான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இதில் கலந்துக்கொண்டது சிறப்புக்குறியது.
மேலும் இதுவரையில் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக / வெளிப்பாட்டுக்காக மட்டுமே நடைபெற்ற போட்டிகள், தற்போது 2005 – 06 ல் நடைபெற்ற சிகரம் தொட்ட ஆசிரியர் போட்டிக்குப் பின்னர் ஆசிரியர்களின் திறன் வெளிப்பாட்டுக்கான களம் இதுவே என்பது கூடுதல் சிறப்புக்குறியது ஆகும். அதனால்தானோ என்னவோ அனைத்து ஆசிரியர்களும் மிகுந்த ஆர்வதோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் பங்கேற்றனர்.
முற்பகலில் இப்போட்டிகளை துவக்கி வைத்து மூன்று ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டுவிட்டுச் சென்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி கா.பெ. மகேஸ்வரி அவர்கள், மீளவும் மாலை நிகழ்வு முடிந்த பின்னர் வந்து அனைத்து ஆசிரியர்களுக்கும், பாராட்டுச் சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கி ஆசிரியர்களின் திறன் வெளிப்பாட்டிற்கு வாழ்த்து கூறிச் சென்றமை மிகவும் பாராட்டுக்குறியது. மேலும் அவர் இப்போட்டிகளில் பங்கேற்ற ஆசிரியர்களின் மேல் வைத்துள்ள பாசத்தையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இது போன்ற ஆசிரியர் திறன் வெளிப்பாட்டு நிகழ்வுகளை அடிக்கடி நடத்தினால் ஆசிரியர்கள் மேலும், மேலும் தம்மை மேம்படுத்திக்கொள்ளவும், புதுபித்துக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும். இதன் மூலம் மாணவர்களுக்கு முன்னுதாரனமாக திகழவும் முடியும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)