சனி, 15 அக்டோபர், 2011

சர்வதேசக் கைகள் கழுவும் தினம் – 2011

    எமது பள்ளியில் இன்று சர்வதேசக் கைகள் கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். ஒன்றிய வள மைய ஆசிரியப் பயிற்றுனர் திருமதி தி. இசைஅருவி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார். விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் சர்வதேசக் கைகள் கழுவும் தினத்தின் அவசியம் பற்றியும், சரியாகக் கைகள் கழுவாமையினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். அதில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை பற்றியும் அதில் கூறப்பட்டுள்ள  பல செய்திகளையும் மாணவர்களிடம் பகிர்ந்துக்கொண்டார்.. இன்று உலகில் இறக்கும் குழந்தைகளில் மூன்றில் இருவர் வயிற்றுப் போக்கு மற்றும் சுவாச நோய் ஆகியவற்றால்தான் என்றும் அதற்கு காரணமான பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் பெருமளவில் வாய் மூலமே உடலுக்குள் நுழைகிறது என்றும் அக்கிருமிகள் பரவ மலம் ஓர் காரணம் என்றும், ஒரு கிராம் மனித மலத்தில் ஒரு கோடி வைரஸ்களும், பத்து இலட்சம் பாக்டீரியாக்களும் உள்ளன என்றும் கூறினார். இதைத் தடுக்க நாம் அனைவரும் கட்டாயமாக சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறைப் பயன்பாட்டுக்குப் பின்பும் கைகளை சோப்பினால் கழுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

     பின்னர் கைகளை சோப்புப் போட்டு முறையாகக் கழுவவேண்டிய முறை செயல் விளக்கம் மூலம் செய்து காட்டியதோடு, நாம் அனைவரும் நமது கைகள் சுத்தமாக உள்ளன என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் உண்மையிலேயே சுத்தமாகத்தான் உள்ளனவா என சோதித்தறிய நான்கு கண்ணாடி குவளைகள் மூலம் சோதனை செய்து காட்டப்பட்ட போது மாணவர்கள் மலைத்துவிட்டனர்.
     பின்னர் சர்வதேசக் கைகள் கழுவும் தின உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது.