திங்கள், 11 ஜனவரி, 2016

பள்ளியில் பொங்கல் விழா..........



இன்று 11.01.2016 திங்கட்கிழமை எமது பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக காலையில் பள்ளி மாணவர்களால் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்திடும் இடத்தை மாணவிகள் மிக நேர்த்தியாக வண்ணக் கோலமிட்டு அழகுபடுத்தினர்.  மாணவர்கள் பொங்கலுக்கேயான வேப்பிலை, பூலாம்பூ, ஆவாரம்பூ, பண்ணைக்கீரைப்பூ, மாவிலை உள்ளிட்டவைகளைக் கொண்டு தோரணங்களைக் கட்டினர்.
அதன் பின்னர் மாணவர்களால், பொங்கல் வைப்பதற்கான பாணை மற்றும் அடுப்பு ஆகியன மங்கள மஞ்சள், மயக்கும் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டு அழகுபடுத்தப்பட்டது. அதன்பின் போதுமான அளவிற்கு நீர் நிரம்பிய பொங்கல் பாணை அடுப்பில் ஏற்றப்பட்டு, கற்பூரம் மூலம் அடுப்பு பற்றவைக்கப்பட்டது. பாணையில் உள்ள நீர் கொதித்த பின்னர் ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டு ஊற வைத்து வைக்கப்பட்டிருந்த பச்சரிசி பாணையில் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் கொட்டப்பட்டது. கொட்டப்பட்ட அரிசி ஒருபாதி வெந்த பிறகு பாணை நிரம்பி வழிந்தோடிய வெண்நுரையை கண்டு மாணவர்கள் அடைந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடு ”பொங்கலோ பொங்கல்”, ”பொங்கலோ பொங்கல்” ”பொங்கலோ பொங்கல்”, என்ற கூக்குரலின் வாயிலாகவே அறிய முடிந்தது. பின்னர் தயார் நிலையில் பக்குவப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லம், நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரி, திராட்சை, தூளாக்கி வைக்கப்பட்டிருந்த ஏலக்காய் ஆகியவற்றை பொங்கல் பாணையில் போட்டு கலக்கினர். பொங்கல் முழுமையும் வெந்த பிறகு அதை பக்குவமாக இறக்கிவைத்தனர்.
பின்னர் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவான பொங்கல் விழாவில் படையலுக்காக வாங்கிவரப்பட்ட பூசணி உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள், இனிக்கும் செங்கரும்பு, மனக்கும் மஞ்சள் ஆகியவற்றையும் மாணவர்களால் உள்ளன்போடும், மட்டற்ற மகிழ்வோடும் தயாரிக்கப்பட்ட பொங்கலையும் சூரியனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
முடிவில் மாணவர்களின் முழு ஈடுபாட்டோடும், மனமகிழ்வோடும் தயாரிக்கப்பட்ட பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டபோதும், அதை ருசித்தபோதும் அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை எனலாம்.
பின்னர் பிற்பகலில் வழிபாட்டில் வைக்கப்பட்ட செங்கரும்பு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது,  அதை அனைத்து மாணவர்களும் வகுப்பு வாரியாக ஒன்றாக அமர்ந்து பாங்காக கடித்தும் சுவைத்ததும் பின்னர் அதன் சக்கைகள் தனி தட்டில் ஒன்றாக சேகரிக்கப்பட்டு அவை குப்பைக் கூடையில் கொட்டப்பட்டதும் பார்க்க ரம்மியமாக இருந்தது.
அனைத்திற்கும் மேலாக இன்று அனைத்து மாணவர்களும் பலவண்ண ஆடைகளில் பள்ளிக்கு வந்தது மாணவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியைக் கூட்டியது.
பள்ளித் தலைமை ஆசிரியர்  திரு செ. இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, திருமதி நா. திலகா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் ஒத்துழைப்போடு நடைபெற்ற இவ்விழா அனைவருக்கும் ஓர் மகிழ்வான தமிழர் திருநாள் என்றால் அது மிகையல்ல.


























































4 கருத்துகள்: