புதன், 29 பிப்ரவரி, 2012

தேசிய அறிவியல் நாள் விழா.......

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில் இன்று (28.02.2012) அறிவியல் அறிஞர் சர் சி.வி.இராமன் அவர்களின் பிறந்த நாள் தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் செ.இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் இரவில் மட்டுமே எரிந்து பகலில் தானாகவே அணைந்துவிடும் மின் விளக்குகள், வயலில் நீர் பாய்ந்த உடன் தானே இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும் மின் மோட்டார், மாணவர்களால் அமைக்கப்பட்ட செயற்கை மலை மற்றும் காடுகள், நியூட்டனின் மூன்றாவது இயக்க விதியைப் பயன்படுத்தி செயல்பட்ட இராக்கெட் ஆகியன அனைவரையும் கவர்ந்தது.  
இது தவிர மாணவர்களால் 20 க்கும் மேற்பட்ட அறிவியல் சோதனைகள் செய்து காட்டப்பட்டது.    கண்காட்சியை ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் தி. இலம்போதரன். க. சண்முகம் ஆகியோரும் பெற்றோர்களும், மாணவர்களும் கண்டுகளித்தனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் ப. சரவணன், சு. சாரதா, மு. இலட்சுமி, பெ. கஸ்தூரி, வெ. வஜ்ரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.













வியாழன், 23 பிப்ரவரி, 2012

தமிழ் இணையப் பயிலரங்கம் - தமிழாசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி

னைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவிலான உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளி தமிழாசிரியர்களுக்கான 5 நாட்கள் பணியிடைப் பயிற்சி கிருஷ்ணகிரியில் கடந்த 20.02.2012 முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாள் நிகழ்வில் மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலர் திரு கே.இராமாணுஜம், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர் திரு நா. அருள் முருகன், ஒசூர் மாவட்டக் கல்வி அலுவலர் திரு இ. மணி ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரையும், கருத்துரையும் வழங்கி உள்ளனர். இப்பயிற்சி முகாமில் கங்கலேரி தமிழாசிரியர் திரு ஆ. பண்ணீர்செல்வம், கிருஷ்ணகிரி ஆண்கள் பள்ளி தமிழாசிரியர் திருமதிமா.தமிழ்ச்செல்வி, இட்டிக்கல் அகரம் தமிழாசிரியர் திருமதி பா. சாந்தி ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
 இப்பயிற்சியில் நல்ல தமிழ் மொழி ஆர்வலரும் தமிழ் இலக்கிய ஆர்வலருமான மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் திரு நா. அருள்முருகன் அவர்கள் முயற்சியால்  ஒவ்வொரு நாளும் ஓர் சிறப்பு அழைப்பாளர் துறை வாரியாக அழைக்கப்பட்டு கருத்துரை வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தமிழில் இணையப் பயன்பாடு குறித்து பயிற்சி அளித்திட நான் அழைக்கப்பட்டிருந்தேன். அதன்படி இன்று காலை 10 மணியளவில் எனது இணையப் பயிலரங்க நிகழ்வு துவங்கி சரியாக 12 மணியளவில் நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளிகளில் 9,10 வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் 220 ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.
இந்நிகழ்வில் முதலில் மொழியின் வளர்ச்சி நிலைகளைக் குறிப்பிட்டுவிட்டு இணையதள வகைப்பாடு, இணையதள வரலாறு, இணையக் குழுக்கள், தமிழில் மடலாற் குழுக்கள் எனக் கூறி தமிழ் இணைய வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களான திருவாளர்கள் நா.கோவிந்தசாமி, உமர்தம்பி, யாழன் சண்முகலிங்கம், பாலாபிள்ளை, முரசு முத்தெழிலன், முகுந்த், தகடூர் கோபி ஆகியோரையும் தமிழ் நூல்களையும் பண்பாட்டையும் காத்திட முயற்சி மேற்கொண்டு வரும் மதுரைத் திட்டம் திரு கு. கல்யாணசுந்தரம், தமிழ் மரபு அறக்கட்டளை திரு நா. கண்ணன், திருமதி சுபாஷினி ட்ரெம்மல், திரு ஆண்டோபீட்டர் ஆகியோரையும், தமிழ் இணையப் பயிலரங்க முன்னோடியான திரு மு. இளங்கோவன் உள்ளிட்டவர்களையும் நிழற்படத்தோடு அறிமுகம் செய்து வைத்தேன்.
பின்னர் இணையத்தில் தமிழ் எழுத்துருக்கள் பயன்பாடு மற்றும்  அதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விளக்கி யுனிகோட் தட்டச்சின் சிறப்புகளை எடுத்துரைத்து அதை பயன்படுத்தும் முறையையும் கூறி nhm writer  பற்றிய அறிமுகத்தையும் அதை பதிவிரக்கம் செய்யும் முறையையும் கூறினேன்.
பின்னர் தமிழ் இணைய நூலகங்கள் வரிசையில் தமிழ் இணையக் கல்விக் கழகம் பற்றிக் கூறி அப்பக்கத்தை திறந்து தமிழ் நூல்களில் சிலப்பதிகாரம் எடுத்து அதில் புகார் காண்டத்தில் நுழைந்து வாழ்த்துப் பாடலும் அதற்கான உரை விளக்கமும் காட்டிய போது அனைத்து ஆசிரியர்களுமே வியந்து போனார்கள். தொடர்ந்து தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரை தமிழ் இலக்கிய மின்திட்டம், நூலகம், காந்தளகம், விருபா உள்ளிட்டவைகளையும் அறிமுகம் செய்தேன்.
பின்னர் திரட்டிகள் வரிசையில் தமிழ்மனம், தமிழ்வெளி, திரட்டி, திண்ணை, கீற்று, தமிழம் நெட் ஆகியவற்றை அறிமுகம் செய்தேன்.
அதன் பின் தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்‌சனரி, பற்ரியும் அதன் பயன்பாடுகள் மற்றும் நமது பங்கேற்பு பற்றியும் எடுத்துக்கூறி அதில் உள்ளே அழைத்துச் சென்றேன்.
பின்னர் மின்னஞ்சல் கணக்கு துவக்கிடும் முறைகள் மற்றும் வலைப்பூ துவக்கிடும் முறைகள் குறித்து விரிவாக விளக்கியும் துவக்கியும் காட்டப்பட்டது.
இறுதியாக தமிழ் இணைய மாநாடுகள், தமிழ் இணைய வானொலிகள் உள்ளிட்ட செய்திகள் அவற்றின் வலை முகவரியோடு காட்டப்பட்டது.
நிகழ்ச்சியைத் துவக்கிடும் முன்பே பங்கேற்பாளர்களின் நிழற்படத்துடன் ஓர் சிறிய அறிமுகச் செய்தியை வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுத்தான் நிகழ்ச்சியைத் துவக்கினேன் எனவே பங்கேற்பாளர்கள் இறுதிவரை ஆர்வத்தோடே இருந்தனர்.
ஓர் முழு மாவட்டத்தையுமே இணைய மூலம் இணையச் செய்யும் வாய்ப்பு கிட்டியமைக்கு மிக்க மகிழ்வு.


வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்.

கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்.

                            கடந்த 13.02.2012 முதல் 15.02.2012 வரையில் எமது பள்ளி இணைந்துள்ள கெங்கபிராம்பட்டி குறுவள மையத்தில் கிராமக் கல்விக் குழு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான  3 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
     அதில் ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் சிறப்புக் கருத்தாளராகக் கலந்துக்கொண்டு பயிற்சி அளித்தார்.
     முன்னதாக நடைபெற்ற பயிற்சி துவக்க விழாவில் மைய பொறுப்பு ஆசிரியப் பயிற்றுநர் வி. சண்முகம் வரவேற்புரை நிகழ்த்தினார். கெங்கபிராம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா செல்வம் தலைமை தாங்கினார். உப்பாரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வி.சிவலிங்கம், கொண்டம்பட்டி  ஊராட்சி மன்றத் தலைவர் கி. மாதேஸ் உப்பாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பி. வீரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மைய உதவி ஒருங்கிணைப்பாளர் பி.சிவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
     மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, குழந்தைகளின் உரிமைகள், அரசு பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி, நலவாழ்வு,சத்துணவு, மற்றும் சுகாதாரம் பற்றியும் கிராமக் கல்விக் குழு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் முக்கியப் பணிகள், பள்ளிகளுக்கு அவர்கள் செய்ய வேண்டிய உதவிகள் பற்றியும் மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
     நிகழ்வுகளின் இடையே பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், யோகா நிகழ்ச்சிகள் ஆகியன நடத்திக் காட்டப்பட்டது. அதில் ஜோதிநகர் பள்ளி மாணவர்களால் நடத்திக் காட்டப்பட்ட DIFFERENCE BETWEEN TRADITIONAL AND ACTIVITY LEARNING METHODOLOGY CLASS ROOM.என்ற நிகழ்ச்சியும் மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பான ஆங்கில மற்றும் தமிழ் பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. அரசு பள்ளி மாணவர்களாலும் எளிமையாக ஆங்கிலத்தில் உரையாட முடியும் என்பதை நிரூபிப்பதாய் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
     இப்பயிற்சி முகாமில் 12 பள்ளிகளைச் சேர்ந்த கிராமக் கல்விக் குழுத் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.