வியாழன், 7 மே, 2009





மாணவர் சேர்க்கை விழா!
இன்று 04.05.2009 - ல் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம் ஒன்றியம், கொட்டுகாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி ம. மார்கிரேட் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில் தற்போது மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அளித்திடும் முக்கியத்துவம் பற்றியும், கல்விக்கு அளித்து வரும் பல தொழில்நுட்ப வசதிகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறிதோடு, அரசாங்கத்தால் இலவசமாக அளிக்கும் எதையும் மறுத்து ஒதுக்கிவிடாத மக்கள் அரசாங்கத்தால் அளிக்கப்படும் இலவசக் கல்வியை மட்டும் ஒதுக்குவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். அடுத்து பேசிய கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு பி. சம்பத் குழந்தைகள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் பற்றி தமது வாழ்த்துரையில் எடுத்துக் கூறினார். அடுத்துப் பேசிய கிராமக் கல்விக் குழுத் தலைவர் திருமதி இராதா நாகராஜன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு பி.திருவேங்கடம் ஆகியோர் பள்ளியின் தற்போதைய வளர்ச்சி பற்றியும் அதற்கு காரணமான பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை வெகுவாகப் பாராட்டி பேசினர். அடுத்து பேசிய ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் திரு த. செலவகுமார் அரசால் துவக்கக் கல்விக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றியும் அதை அனைத்து மக்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அடுத்து புதிதாக முதல் வகுப்பில் சேர வந்திருந்த மாணவர்களுக்கு சேர்க்கை வழ்ங்கி அனைவருக்கும் புத்தக பை வழங்கி சிறப்புரை ஆற்றிய மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் திரு எஸ். கந்தசாமி அவர்கள் தமது உரையில் கல்வியின் சிறப்பு பற்றியும் அதனைப் பெற்றிட வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்ததோடு இப்பள்ளியில் வழங்கப்படும் பல்வேறு கற்பித்தல் சிறப்பு முறைகள் பற்றியும், நடைமுறைப் படுத்தப்படும் இளைஞர் செஞ்சிலுவச் சங்கம், தேசிய பசுமைப் படை உள்ளிட்ட சிறப்புத் திட்டங்கள் பற்றியும் வெகுவாக பாராட்டியதோடு இப்பள்ளி உயர்நிலைப் பள்ளி போல் தோற்றமளிப்பதாகவும் கூறி பெருமைப் படுத்தினார்.
அடுத்து பேசிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி ம. மார்கிரேட் தமது தலைமை உரையில் இப்பள்ளியில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை நினைவு கூர்ந்து வெகுவாகப் பாராட்டியதோடு இன்று இப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை விழாவின் மூலம் 10 குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பதும், குறிப்பாக தனியார் பள்ளியில் இருந்து 3 குழந்தைகள் வந்து இப்பள்ளியில் சேர்ந்திருப்பதும் இப்பள்ளிக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும் எனக்கூறி இதே போன்ற நடைமுறையை பிற பள்ளிகளும் கடைபிடித்தால் அரசு பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை உயரும் எனக் கூறி முடித்தார்.
இறுதியில் பள்ளி பட்டதாரி உதவி ஆசிரியர் திரு சி. சிவா அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துக்கொண்டனர்.